­

இத்தாலிய திரைப்பட இயக்குநர் மைக்கலேஞ்சலோ ஆண்டனியோனி (1912 -2007)

October 12, 2008


முரண்களிலான திரைக்கலைஞன


"My contribution to the formation of a new cinematic language is a matter that concerns critics. And not even today's critics, but rather those of tomorrow, if film endures as an art
and if my films resist the ravages of time."
Michelangelo Antonioni


1
மைக்கலேஞ்சலோ ஆண்டனியோனியின் ‘எல் அவென்ஞ்சுரா’ (The Adventure, 1959) திரைப்படத்தில் ஒரு காட்சிவரும். எயோலியன் கடல்மத்தியிலிருக்கும் லிஸ்கா பியாங்கா பாறைத் தீவொன்றிற்கு தனது நட்பு வட்டத்துடன் பயணிக்கும் அன்னா என்பவள் அங்கு சென்றடைந்த சில நிமிடங்களில் திடீரெனக் காணாமல் போய்விடுவாள். அந்த பாறைகளில் நிலவும் நேரடியான வெம்மையைப் போலவே அவள் மனஉளைச்சல் கொண்டிருக்கும் கதாபாத்திரம். அன்பிலான உறவியல்பை எதிர்பார்த்து தோற்ற வாழ்வின் விரக்தியுச்சம் அவளை துரத்திக் கொண்டிருக்கும். நமது உறவுச்சுற்றத்தில் நிகழ்ந்துவிடும் எதிர்பாராத தற்கொலையைப்போலவே, அன்னாவின் மறைவும் நம்பத்தகாததாய் படம் காணும் நமக்குத் தோற்றமளிக்கிறது. இருந்தவர் இருப்பற்றுப்போவது நம்பகம் மிதிபடும் காலப் புதிர்தான். அன்னா காணாமல் போனதை மற்ற கதாபாத்திரங்கள் உணரும்தருணம், வெகுதூரத்தில் ஒரு படகின் நகர்வோசை கேட்கும். எனவே அவளது இருப்பை, இறப்பை உறுதிசெய்யமுடியாமல் படத்தின் கதாபாத்திரங்களோடு நாமும் மன அவதிகொள்கிறோம். உடன்வந்த அனைவரும் அவளை நெடுநேரம் தேடுவார்கள். அவள் மறைந்துவிட்டபிறகு அவள் மீதான கவனத்தை படத்தின் மீதக் கதாபாத்திரங்கள் போலவே நாமும் அடைகிறோம். இல்லாத அவளைத் தேடி நாமும் கதாபாத்திரங்களோடு மனவெளியில் துக்கத்துடன் அலைகிறோம்.


அப்படத்தின் இயக்குநரான மைக்கலேஞ்சலோ ஆண்டனியோனியும் அந்த உணர்வை வெகுஎளிதில் நம்மீது ஏற்றிவிட்டுச்சென்றிருக்கிறார். அவரது மறைவு சென்றமாதம் ஜூலை 30-ஆம் நாள் மாலை நிகழ்ந்திருக்கிறது. அவர் உயிர்ப்புடன் இருந்தபோதிருந்த அவரது படங்களில் உலவும் மௌனம் இப்போது அவர் இருப்பை துறந்தபொழுதில் மேலுமதிக உள்ளழுத்தத்தோடு திரைப்பரப்பில் விரவிவிட்டிருக்கக் கூடும் எனத் தோன்றுகிறது. ஆன்மாவிலிருந்து கலையைப் படைப்பவனது இறுதி எதிர்வினை இவ்விதம்தான் இருக்கும்போல. மேலுமான தனது வாழ்வை நீட்டித்துக் கொள்ளவிரும்பும் ஒரு கலைஞனின் கலையின்மீதான பற்றுணர்ச்சியாகவும் இந்தக் கற்பனைத் தோற்றம் விரிவடைகிறது. எனினும் கலைஞனது மரணம் என்பது நமது கணிப்பின் வரையறைக்குள் அடங்காதது. ஆண்டனியோனியும் காலப்புதிரில் வயப்பட்டு நிச்சலனத்துடன் தலைமறைவாகிவிட்டார் என்றே (அவர் காலத்தைத் தாண்டிச்சென்றுவிட்ட நிகழ்கதியிலும்) தோன்றுகிறது. தான் படைத்த அன்னாவினது சித்திரத்தில் வரைகோடுகளின் ஒத்திசைவில் தன்னுருவத்தையும் கலந்துவிட்டிருக்கிறார். அன்னா அவளது இடையறா இருப்பை மெய்பிக்க முயற்சிக்கும் நம்பகத்துடனும் தொடர்புடையது இந்தக் கலப்பு.


எல்லோருக்கும் பொதுவான மரணம், வயோதிகர்களை எளிதில் அடையாளம் கண்டுவிடும் என்பதை நாம் உணர்ந்திருக்கும்போதிலும், அவர்களது மறைவுச்செய்தி கேட்டவுடன் சற்றும் எதிர்பாராத மனச்சறுக்கலில் விழுந்தெழுந்த பதற்றத்துடனே நம்மை உணர்கிறோம். உலக சினிமாவின் முக்கிய ஆளுமையான ஸ்விடிஸ் திரைப்பட மேதை இங்க்மர் பெர்க்மன் மரணமடைந்த செய்தியை செவிமடுத்து உள்ளம் தளர்ந்திருந்த சில மணித்துளிகளிலேயே பெர்க்மனுக்கு இணையான ஆண்டனியோனியின் மரணச்செய்தியும் வந்தடைந்தது. உடன் மனதில் பெருத்த வலியும் தொற்றிக் கொண்டது. எனினும் அது சிறிதுநேரமே தங்கியிருந்து விடைபெற்றுக் கொண்ட வலிதான். ஏனெனில், ஆண்டனியோனியின் திரைப்பரப்பில் அத்தகைய ஒரு வலியுணர்விற்கு இடமிருந்தால் அது ஒரு வழிச்செய்தியாக எதிர்கொண்டே கடக்கப்பார்க்கும். அவரது கதாபாத்திரங்களும் சிறிய மௌனமொன்றை பிறப்பித்துக் கடந்தபடி இருப்பார்கள். இந்தக் குணவியல்பு, அனைத்தையும் நிச்சலனமாக எதிர்கொள்ளும் தன்மையிலானது. விதிவயப்பட்ட அனைத்தையும் சாதுர்யமாக எதிர்காணும் தன்மை யிலானதும் கூட.


2
மைக்கலேஞ்சலோ ஆண்டனியோனி, 1912-ஆம் வருடம் செப்டம்பர் 29-ஆம் நாள் இத்தாலியிலுள்ள ஃபெராரா எனும் நகரத்தின் வடக்குப்பகுதியில் பிறந்தார். அவரது பெற்றோருக்கு உள்ளூரில் சொந்த நிலங்கள் இருந்தன. பொருளாதார வசதியுடைய குடும்பப் பின்னணி. எனவே உலகின் பல கலைஞர்களுக்கு கழுகின் துரத்தலென வாய்த்துவிடும் வறுமைச்சூழல் ஆண்டனியோனியை நெருங்கவில்லை. 1931-முதல் 1935-வரை போல்கனோ பல்கலைக்கழகத்தில் பொருளாதாரப் பட்டப்படிப்பை மேற்கொண்டார். பொருளாதாரப் பிரிவை அவர் தேர்ந்தெடுத்ததற்கு அவரது ‘நேசிப்பைப் பெற்ற தோழி’ அப்பாடத்தை தேர்ந்தெடுத்திருந்ததே காரணம். பட்டப்படிப்பிற்குப் பின் கதைகள், திரை விமர்சனங்கள், ஓவியங்கள் என தனது கலைப்பணியைத் தொடங்கினார். 1935-39 வரை பத்திரிகையாளராகவும் வங்கிப் பணியாளராகவும் இருந்தார். பின்பு 1940-இல் ரோம் நகருக்குச் சென்று ‘சென்டரோ ஸ்பெரிமன்டல் டி சினிமாடோ கிராஃபிகா’ (Experimental Cinematography Center) திரைக்கல்வி நிறுவனத்தில் 1940-41 காலகட்டத்தில் திரைப்படிப்பை மேற்கொண்டார். இந்த தருணங்களில், சினிமா எனும் இதழிலும் மற்றும் சில திரையிதழ்களிலும் திரைவிமர்சகராக 1949-ஆம் ஆண்டு வரை பணியாற்றினார். பெனிடோ முசோலினியின் மகன் நடத்திவந்த பாசிச சினிமா இதழில் சினிமா குறித்து எழுதிவந்தார். பின்பு அவரது ‘விசுவாசக் குறைவு’ காரணமாக எழுதுவதிலிருந்து வெளியேற்றப்பட்டார். அடுத்து, அவரது திரைநுழைவுக் காலம் துவங்குகிறது. 1942-இல் மார்செல் கார்னே மற்றும் என்ரிகோ ஃபுல்சிக்நோனியிடம் உதவி இயக்குநராக பணி செய்தார். திரைக்கதையாளராக அவரது முதல் படம், ராபர்ட்டோ ரோஸலினியின் 'பைலட் திரும்புதல்'. 1942-52 வரை ஃபெடரிகோ ஃபெலினி உள்ளிட்ட பல உலகப் புகழ்பெற்றத் திரைப்பட இயக்குநர்களிடம் திரைக்கதையாளராகப் பணியாற்றினார். 1947-50 காலகட்டங்களில் ஆவணக் குறும்படங்களை இயக்கினார். ‘குரோனகா டி உன் அமோர்’ (The Story of Love affair, 1950) அவரது முதல் திரைப்படம். பின்பு பத்தாண்டுகாலத்திற்குப் பிறகு எல் அவெஞ்சுரா. முப்படத்திற்கான (Triology) முதல் படமாகும் இது. ‘எல் அவென்ஞ்சுரா’ திரைப்படத்திலிருந்தே ஆண்டனியோனி தனக்குரிய திரைப்பாணியை வரையறுத்துக் கொண்டார்.


எனினும் அந்த திரைப்பாணி பார்வையாளர்களை ஈர்க்கும்வகையில் அமையப் பெறவில்லை. ஆண்டனியோனிக்கும் பார்வையாளர்களை ஈர்க்கும்படியான திரைப்பாணியில் நம்பிக்கையில்லை. அவரது திரைப்பாணியை உள்ளுணர்ந்து கொள்ளும் தனித்த விருப்பமுள்ள பார்வையாளரையே அவர் எதிர்காண விரும்பியிருந்தார். ‘எல் அவென்ஞ்சுரா’ துவங்கி அவரது அனைத்துப்படங்களுமே, காட்சிகளின் ஒருங்கிணைப்பின் அடிப்படையில் கதைத்தளம் சிதைவுற்ற படங்களாகவே அமைந்திருந்தன. பார்வையாளருக்கு ஒரு முழுவடிவிலான கருப்பொருளையும் அதற்குரிய தெளிவையும் அவை அளிக்கவில்லை. மாறாக கலைத்துப் போட்டவிதமாய் தோற்றம் தந்தன. படங்களில் வரும் நீண்ட தொனியிலான காட்சியமைப்புக்களும், தேக்கமடையும் கால இருப்பும், கதாபாத்திரங்களை முழுமையாக மையப்படுத்தாத ஒளிப்பதிவுக்கோணங்களின் புதியமுயற்சியும் அவர்களின் இடையறாக மனமுரண்களும் அக்காலத்தில் வெளியான வழக்க வகைக்குட்பட்ட படங்களை ஏற்றுக்கொண்டிருந்த பொதுப்பார்வையாளர்களால் நிராகரிக்கத்தக்க காரணமாக அமைந்தன. இருப்பினும், ஆண்டனி யோனி அது குறித்த கவலையை ஒருபோதும் வெளிப்படுத்தினதில்லை. தனது தனித்த ரசனைக்குட்பட்ட திரைப்போக்கையே இறுதிவரை கடைபிடித்தார். பார்வையாளர்களை ஈர்க்காத பட்சத்திலும், ‘எல் அவென்ஞ்சுரா’ கான் திரைப்பட விழாவின் சிறப்பு நடுவர்குழு விருதைப் பெற்றது. விருதளிப்பு 'புதிய திரை மொழிக்கும் அதன் சிறப்பான ஒளிப்பிம்பங்களுக்கும்' வழங்கப்பட்டது. 1962-இல், ‘எல் அவென்ஞ்சுரா’வை உலகின் சிறந்த பத்துப்படங்களில் இரண்டாம் படமாக தேர்ந்தெடுத்தது லண்டனிலிருந்து வெளிவரும் ‘சைட் அண்ட் சவுண்ட்’ சினிமா இதழினது விமர்சகர் குழு. அதே ஆண்டு வெளியான ‘எல் எக்லிஸ்’ (The Eclipse, 1961) திரைப்படமும் கான் திரைப்பட விழாவில் ‘எல் அவென்ஞ்சுரா’ பெற்ற விருதை மீண்டும் பெற்றது. இடைப்படமாக 1961-இல் வெளியான ‘லா நோட்டே’ (The Night, 1960) சிறந்த படத்திற்கான தகுதிகள் பெற்றிருப்பினும், ஒரே இரவில் நடைபெறும் கதைத்தளத்தின் விரிவு காரணமாக மேலும் தேக்கமடைந்த ஆக்கமாக கருதப்பட்டது. அப்படத்தில் இத்தாலிய சினிமாவின் புகழ்பெற்ற நடிகரான மார்செல்லோ மாஸ்ட்ரோயனி நடித்திருந்தார். ‘எல் அவென்ஞ்சுரா’ படத்திற்கும் ‘எல் எக்லிஸ்’ படத்திற்கும் உள்ள இணையான தொடர்புதொனி ‘லா நோட்டே’ வில் இல்லை என்றே கூறவேண்டும்.


3
1940-களின் இறுதிகளில், ஆண்டனியோனி எடுத்த ஆவணப்படங்கள் இத்தாலிய நியோரியலிஸ வளர்ச்சிக்கு பெரிதும் உதவியிருக்கின்றன. போருக்குப் பிந்திய நாட்டின் தனிமை மனோநிலையை அதன் சிதையாத உள்ளுருவத்தோடு சித்திரித்த சினிமாக் கலைஞராக அவதானிக்கப் பட்டார். அவரது முழுநீளத் திரைப்படங்கள் முரண்படுதல், நவீனவாழ்வின் காதலற்ற காமநுகர்வு, துன்புறுத்தப்பட்ட மனேநிலை என பல்வேறான மனவினைகளை திரைப்படுத்துகின்றன. ஆண்கள் எந்தவொரு பெண்ணிலும் மையல்கொள்பவர்களாகவும், பெண்கள் தமது காதலர்களின் தூய்மையை வேண்டுபவர்களாகவும் இருக்கிறார்கள். ஒவ்வொருவருக்குள்ளும் மனமுரண் மற்றும் மனஅழுத்தம் அந்தரங்க குணமாகவே பேணப்படுகிறது. எந்த ஒரு கதாபாத்திரமும் தன்னைத் திறந்து பார்க்க விரும்புவதில்லை. பிறரையும் அனுமதிப்பதில்லை. விதிவயப்பட்ட நிலையிலேயே ஊசலாடுகின்றனர். கதாபாத்திரங்களின் மனப்பதற்றம் அவர்களை ஓரிடத்தில் நிற்கச் செய்யாமல் நடந்துகொண்டே இருக்கும்படி செய்விக்கிறது. அறைகளுள் நெடுநேரம் செய்வதறியாது நடமாடுவதையும், சலிப்பேற்படும் நிலையில் வெளியே சென்று வீதிகளில் காரணமின்றி உலாவுவதையும் அவரது பெண்கதாபாத்திரங்கள் மேற்கொள்கின்றனர்.


குறிப்பாக, அவரது முப்படங்களான ‘எல் அவென்ஞ்சுரா’, ‘லா நோட்டே’, ‘எல் எக்லிஸ்’ ஆகிய படங்களில் தோன்றும் நடிகை மோனிகா பிட்டி கதாபாத்திரத்தின் மனச்சிக்கல்களை முற்றிலும் உட்கொண்டவிதமான இயல்புடன் நடித்திருந்தார். அவரது சின்னச்சின்ன அசைவுகள்கூட அந்த முரண்கூறுகளை வெளிப்படுத்தும்விதமாக அமைந்திருக்கும். அந்த முரண்கூறுகள் படம் முழுக்கவே தொடர்கின்றன. அவ்வப்போது நேரும் சிறு மகிழ்ச்சி அனுபவங்களில் பங்கேற்று உடனே வெளியேறிவிடுகிற கணங்களுடனானது அவரது கதாபாத்திரம். ‘லா நோட்டே’வில் வரும் லீத்யா கதாபாத்திரத்திலும் இக்குணத்தை காணலாம். இந்தக் கதாபாத்திரங்கள் அன்புறவை தாம் சார்ந்திருக்கும் ஆண்களிடம் எப்போதும் விழைந்தவண்ணம் இருக்கின்றன. காதலை உறுதிசெய்து கொள்ளும் பதற்றங்களை அடிக்கடி உருவாக்கிக்கொள்கின்றன. 60-களின் ஆரம்பங்களில் வந்த இந்த முப்படங்களின் பெண்கதாபாத்திரங்கள் நிகழ்த்தின தாக்கம் பிற்காலத்திய ஐரோப்பிய சினிமாவில் மிகவும் வலுவானது. சமகால ஐரோப்பிய சினிமாவின் பெண்கதாபாத்திரங்களின் மனமுரண் சார்ந்த தீர்வற்ற பிரச்சினைப்பாடுகளுக்கு முன்னோடிப் பிரதிகளாக நடமாடிச் சென்றவை ஆண்டனி யோனியினது பெண்கதாபாத்திரங்கள்.


‘டிஸர்ட்டோ ரோஸோ’ (Red Desert, 1964) ஆண்டனியோனியின் முதல் வண்ணப்படம். இதிலும் மோனிகா விட்டியே மையப் பாத்திரம். படப்பிடிப்புத் தளத்திற்குச் செல்வதற்கு முன்னதாக ஒரு வெண்காகிதப்பரப்பில் இருக்கும் வண்ணங்களையெல்லாம் கொட்டி ஓவியப்படுத்திப் பார்த்திருக்கிறார் ஆண்டனியோனி. அந்த வண்ணங்களின் அடர்த்தி தரும் பிரதிபலிப்பை ‘டிஸர்ட்டோ ரோஸோ’ திரைப்படத்தில் நாம் காணலாம். ஆண்டனியோனியில் துணைவியாகிய என்ரிகா ஃபிகோ, “ஆண்டனியோனி இந்தப் படத்தை இயக்கவில்லை, ‘தீட்டியிருக்கிறார்’ ” எனக் குறிப்பிடுகிறார்.


1960-களுக்குப் பிறகு ஆண்டனியோனியின் வருகை இத்தாலிய சினிமாவில் அழகியல்பூர்வமான சினிமாமொழியின் வருகையாக கணிக்கப்பட்ட நிலையில், 1966-இல் இத்தாலிய பிரபல சினிமா தயாரிப்பாளரான கார்லோ போன்ட்டி மூன்று ஆங்கிலப் படங்களை இயக்கித் தரும்படி ஆண்டனியோனியிடம் கேட்டுக்கொண்டார். அந்த வரிசையில் லண்டனில் படம்பிடிக்கப்பட்டு வெளியான முதல்படம் ‘ப்ளோ அப்’ (Blow up, 1966). ஒரு புகைப்படக் கலைஞன் தன்னையறியாமல் பதிவுசெய்த ஒரு கொலைநிகழ்வைப் பற்றிய அப்படத்தின் செறிவடைந்த கதைப்போக்கும் சுவாரசியமும் மிகப்பெரும் வரவேற்பை அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில் நிகழ்த்தியது. அப்படத்திற்கு கான் திரைப்பட விழாவின் மிக உயர்ந்த பரிசான ‘தங்கப்பனை’ விருதும் கிடைத்தது. அடுத்து, 1968-களில் நடந்த அரசியல் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்ட படம் ‘சப்ரிக்ஸ்கி பாயிண்ட்’ (Zabriskie Point, 1969). கலிஃபோர்னியாவில் படம்பிடிக்கப்பட்டது. மூன்றாவது படம் ‘தி பேசஞ்சர்’ (The Passenger, 1975). ஹாலிவுட் பிரபல நடிகரான ஜாக் நிக்கல்ஸனும், பெர்னார்டோ பெர்டோலூச்சியின் ‘லாஸ்ட் டாங்கோ இன் பாரீஸ்’ திரைப்படத்தின் மூலம் புகழ்பெற்றிருந்த மரியா ஸ்னெய்டரும் நடித்திருந்தனர். ஐரோப்பிய மற்றும் வடக்கு ஆப்பிரிக்காவில் படம்பிடிக்கப்பட்ட படம் இது.


‘பியான்ட் தி க்ளவுட்ஸ்’ (Beyond the Clouds, 1995) பணியாற்றினார். ஆண்டனியோனியின் ‘பவுலிங் ஆன் தி திபேர்’ (Bowling on the Tiber) தொகுப்பிலிருக்கும் சிறுகதைகளை அடிப்படையாக வைத்து உருவான இப்படம் காட்சிபூர்வமாகவும் அழகியல்பூர்வமாகவும் மிகச்சிறந்த ஒருங்கிணைப்பைப் பெற்ற படமாகும். அதேவருடம் ஆஸ்கார் விருதுக்குழு, அவரது 25 படங்கள் மற்றும் பல திரைக்கதைகளுக்காக வழங்கின வாழ்வுச் சாதனைவிருதை ஜாக் நிக்கல்ஸனது கைகளின் மூலமாகப் பெற்றார். (பின்பு அந்த ஆஸ்கார் விருதுச்சிலை, மற்ற விருதுச்சின்னங்களோடு ஆண்டனியோனியின் வீட்டிலிருந்து திருடப்பட்டன.) விருதளிப்பின்போது ஜாக் நிக்கல்ஸன் தனது உரையில், ‘வெறுமையில், உலகின் அமைதிவெளியில் ஆண்டனியோனி கண்டுபிடிக்கும் உருவகங்களால் நமது இதயங்களின் அமைதியில் வெளிச்சத்தை ஏற்றுகிறார்’ எனப் புகழாரம் சூட்டினார்.


4
திரைப்பட இயக்கத்தின் ஆரம்ப காலங்களில் அவரது பிரதான நடிகை மோனிகா விட்டியோடு வாழ்ந்த காலத்தின்போதே அவரது ஓவிய ஈடுபாடு துவக்கம்பெற்றிருந்தது. அப்போதிருந்து இறக்கும்வரை ஓவியம் தீட்டுவது அவருக்குப் பிடித்த செயல். அதுவும் இருளான அறையில் அமர்ந்து தீட்டும்போதுதான் அவரது ஓவியங்கள் உயிர்துளிர்க்கும். இதற்கான காரணத்தை என்ரிகா ஃபிகோ ஒரு நேர்காணலில் ‘ரோமின் விளக்கு வெளிச்சங்கள் அவரது கண்களைக் கூசச் செய்த காலத்திலிருந்து இருள்தான் அவருடைய ஓவியவெளியாக இருந்தது’ எனக் குறிப்பிட்டிருக்கிறார். யோசிக்கையில், ஆண்டனியோனியின் திரைப்படங்களில் இருளுக்கு மிகவும் முக்கியத்துவம் இருக்கும். அதிரும் ‘லா நோட்டே’ திரைப்படம் பெரும்பான்மையாக இருட்பரப்பையே கொண்டிருக்கிறது. இருளை தப்புதலுக்குரிய வடிவமாகவும், மனஅயர்வை ஒத்திவைக்கும் வெளியாகவும் ஆண்டனியோனி அனுபவமாக்குகிறார்.


எழுபதுகளில், திரைப்பட இயக்கத்திலிருந்து மெதுவாக விலகிக் கொண்டிருக்கும் தோற்றத்தை அளித்தார் ஆண்டனியோனி. 1985-இல் அவருக்கு பக்கவாதம் ஏற்பட்டது. பின்பு இறக்கும்வரை அவரால் பேசமுடிந்ததில்லை. இந்த இடைக் காலத்தில் ஓவியங்கள் தீட்டுவதில் வெகுவாக ஆர்வங்கொண்டார். குரலற்றுப் போன தனது உரைவெளிப்பாட்டை ஓவியங்களின் வழி சமன் செய்ய முயன்றார் என்பதே துயரமான உண்மை. 2006-ஆம் ஆண்டு தனது 94-ஆம் வயது துவக்கத்தின்போது, ரோமில் தனது ஓவியம், கோட்டோவியம், சிற்பங்கள் உள்ளடங்கின கண்காட்சியை நிகழ்த்தினார். கண்காட்சியின் தலைப்பு : Silence in Colour. எனினும், ஆண்டனியோனி தன்னை ஓவியராக மனதளவில் ஏற்றுக் கொண்டிருக்கவில்லை. நாம் உணர்வுபூர்வமாக பாவிப்பதுபோலவே அவருக்கும் அவர் திரைப்படக் கலைஞர்தான். அவரது வாழ்வுப் படகு கடலில் மூழ்கிவிடும் நிலையிலிருந்த வாழ்வின் இறுதிக் காலகட்டத்திலும் படமாக்கத்திற்குத் தேவையான படபிடிப்புத் தளங்களை தான் அமர்ந்திருக்கும் வாசலிலும் செல்லும் வெளியிடங்களிலும் சுற்றும் முற்றும் ஒளிப்பதிவுக் கண்களால் தேடிக் கொண்டிருந்தார். காட்சிக்குத் தேவையான சரியான ஜன்னல் சரியான கதவு குறித்த தேடல் அவரது எண்ணத்தில் எப்போதும் வட்டமடித்துக் கொண்டிருந்தது. ஒரு சிறந்த கலைஞனுக்குள் எப்போதும் சாகாநிலையோடு உள்படர்ந்திருக்கும் காதல் அது. தனது இறப்பிலும்கூட அந்தக் காதலை பிற கலைஞருக்கு விட்டுச் செல்லும்படியாகவே அமையப் பெற்றது அந்த மன வினை. ஆண்டனியோனியும் இந்த உதாரணத்திற்குள்தான் நிற்கிறார்.


இத்தாலியின் பிரபல இயக்குநரான மேரியோ மோனிசெல்லி, ‘ஆண்டனியோனி எப்படி கருத்தாங்கங்களை, உணர்ச்சிகளை திரையில் கொண்டுவரவேண்டுமென்று அறிந்திருந்தார். அவருக்கு முன்னதாக இத்தகைய அர்த்தங்களுடன் திரைப்படம் எடுக்கும்விதமாக எவரொருவரும் இருந்ததில்லை. அவர் இத்தாலியினதும் உலகினுடையதுமான திரைப்பட மேதை’ என்று கூறியிருக்கிறார். ‘ஆண்டனியோனி எனும் திரைமேதை நமக்கு விட்டுச் சென்றுள்ளதை சுருங்கக் கூறுவது கடினமானது. அவர் 20-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த திரைப்பட இயக்குநர்களில் புதிய பிம்பத்தை உருவாக்கியவர்’ என ஆண்டனியோனியுடன் இணைஇயக்குநராகப் பணியாற்றிய விம் வெண்டர்ஸ் கூறுகிறார்.


ஆண்டனியோனியின் திரைப்படங்கள் மௌமும் தனிமைவயமும் சூழ்ந்த நமது கணங்களையும் உள்கொண்டிருப்பவைதான். நமது மனவெம்மையில் விளையும் குணப் பிளவுகளை நாம் பதற்றத்துடன் அமர்ந்து கவனத்தில் கொள்ளும்படி திரையில் நேரெதிரே நடமாடிக்கொண்டிருக்கின்றன அவரது கதாபாத்திரங்கள். ‘வாழ்வு என்பது சூட்சமம் புரிபடாத, சற்றும் மாற்றவியலாத முரண்வயப்பட்ட விதிநிலைதான்’ என நாம் உணரும் தருணம் அந்தக் கதாபாத்திரங்களில் நடமாட்டம் திரையைக் கடந்து நமது உள்ளங்களிலும் நடையிடத் துவங்கிவிடும்படியானவை. ஆண்டனியோனி நிகழ்த்தும் இந்தக் கலை வினை தவிர்க்க வியலாதது. இந்தக் கலைவினையே ஆண்டனியோனி நமக்கு விட்டுச்சென்றிருக்கும் உணர்வழுந்திப்போன மௌனத்திலான பரிமாற்றமாகவும் விரிவடைந்துசெல்வது.


*
காலச்சுவடு செப்டம்பர் 2007 இதழில் வெளியான எனது கட்டுரை.

You Might Also Like

0 comments