பூர்ணம் விஸ்வநாதன் (1921 - 2008)
November 26, 2008
கே. பாலச்சந்தரின் 'வறுமையின் நிறம் சிவப்பு' (1980) படத்தில்தான் பூர்ணம் விஸ்வநாதனை நான் முதலில் பார்த்தது. நேர்மை தரித்த மனவியல்பைப் பெற்றிருக்கும் ரங்கன் (கமல்ஹாசன்) கதாபாத்திரத்தின் வாழ்வு மதிப்பீடுகளை ஏற்கவியலாது முரண்படும் தந்தையாக நடித்திருந்தார். சங்கீத வித்வானான அவரது தம்பூராவை ரங்கன் திருடி விற்றுவிட்டு ஏதுமறியாததுபோல இருக்கும் காட்சியன்று வரும். தம்பூராவைக் காணாமல் பதறிப்போய் ரங்கனிடம் சண்டையிடும்போது, அவரது நடிப்பு அந்தக் கணங்களின் திரைப்பரப்பை கமலுக்கு இணையாய் நிரப்பிக் கொண்டதாய் எனக்கு நினைவு. இம்மாதிரி ஒரு சில காட்சிகளிலேயே தோன்றினபோதும், வலுவான நடிப்புத் திறனின் காரணமாக படம் பார்த்த பார்வையாளரது நினைவில் தம்மை முழுமையாக பதிப்பித்துக் கொண்ட நடிகர்களுள் பூர்ணம் விஸ்வநாதனும் இடம்பெறுவார். பின்பு அதே பாலச்சந்தரின் இயக்கத்தில் வெளியான 'உன்னால் முடியும் தம்பி' யில் வரும் உதயமூர்த்தியினது (கமல்ஹாசன்) தந்தைக் கதாபாத்திரம் (ஜெமினி கணேசன்) ஏறக்குறைய 'வறுமையின் நிறம் சிவப்பு' படத்தில் பூர்ணம் விஸ்வநாதன் செய்த பாத்திரத்தை கொஞ்சம் காத்திரமாகப் பிரதிபலிப்பதாக அமைந்தது.
தொன்னூறுகளின் ஆரம்பம் என்று நினைக்கிறேன். தொலைக்காட்சி கொடுங்கனவாக வலுப்பெறாத காலம். அச்சமயம், சுஜாதாவின் எழுத்து மற்றும் பூர்ணம் விஸ்வநாதனின் நடிப்பு எனும் கூட்டிணைவில் சிறுபடங்கள் தொலைக்காட்சியில் இடம்பெற்றன. மாலைக்கும் இரவிற்குமான நடுநேரங்களில் அப்படங்களைக் காண்பதற்கென்றே வீட்டைவிட்டு எங்கும் செல்லாமல் காத்திருந்த நாட்களது. அந்த சிறுபடங்களில் சில எதிர்பாராத திடீர் திருப்பங்களுடன் பாதியில் முடிக்கப்பட்டு மீதி அடுத்த வாரம் எனச் சொல்லி ரசிப்பின் பொறுமையை சோதித்துவிடும். அதன்மீதியை உடனடியாகக் காணாமல் மனதில் நிம்மதி தோன்றாது எனும்படியிருக்கும் எனது பதற்றம். அன்றைக்கு இருந்த ரசனையின் பழக்கவுறவு தேர்ச்சியற்ற மனோநிலையின் ஊடானது என இப்போது தோன்றினாலும், அந்தக் காத்திருப்பின் புத்துணர்வு என்பது இன்றைக்கும் அழுத்தமான மகிழ்ச்சிகணங்களுடனேயே நினைவில் தடப்பட்டிருக்கிறது என்பது மறுக்கவியலாதது.
பூர்ணம் தான் நடித்த படங்களில் ஒரேவிதமான கதாபாத்திர குணாம்சத்தையே வெளியிட்டார். தமிழில் கௌரவ கதாபாத்திரங்களில் நடித்த நடிகர்களில் தொன்னூறு சதவீதம் பேர் இம்மாதிரியான நடிப்பு முறையைக் கையாண்டவர்கள்தான். பொதுவாக, ரசிகர்களின் எதிர்பார்ப்பை ஈடுசெய்ய நாயகப் பாத்திரங்களுக்குத்தான் குணாம்சங்களில் வித்தியாசங்கள் தேவைப்படும். உப நடிகருக்கு அது பிரச்சினையாக இருப்பதில்லை. தனது ஒரேவிதமான நடிப்புச் சாயலையே அனைத்துப் படங்களிலும் பின்பற்றினபோதும் பார்வையாளருக்கு அலுப்பூட்டாத வண்ணம் திரையில் கோலோச்சினவர்களாக குறிக்கத் தக்கவர்கள் ரெங்காராவ், டி.எஸ். பாலையா, சி.கே. சரஸ்வதி போன்ற அரிய நடிகர்கள். இந்த வரிசையில் பூர்ணம் விஸ்வநாதனும் தன்னை இருத்திக் கொள்பவர் என்றே தோன்றுகிறது.
அப்பாவித்தனமான ஒரு நபர் எதிர்பாராத சிக்கலில் அகப்படும்போது மேற்கொள்ளும் சமாளிப்பாக, வார்த்தைகள் வராமல் வெற்று ஓசைகளை எழுப்பி பிதற்றுவதைப் போல அவர் செய்யும் பாவனை தமிழ் ரசிகர் மத்தியில் மிகவும் பிரசித்தம். தொலைக்காட்சியிலும், மேடையிலும் மிமிக்ரி செய்யும் கலைஞர்கள்கூட அந்தப் பிதற்றலை சத்தமிட்டுத்தான் பூர்ணத்தை நமக்கு ஞாபகப்படுத்துவார்கள். எனது பார்வையில், தனது வழக்கமான குணவியல்பை பிரதிசெய்யாமல் முற்றிலுமாக மாறுபட்டு அவர் நடித்த திரைப்படம் 'மூன்றாம் பிறை' (1982) மாத்திரமே. அதில் இறுக்கமான குணம்கொண்ட கதாபாத்திரத்தில் சில்க் ஸ்மிதாவின் கணவராக சில காட்சிகளே வந்து செல்வார். சில்க் ஸ்மிதாவுடன் உறவு கொள்வதுபோன்ற ஒரு காட்சியிலும் நடித்து, (வெவ்வேறு வயதினருள் நிகழும் ஒவ்வாத உடலுறவின் மனநெருடலை அக்காட்சியில் இயக்குநர் பாலுமகேந்திரா திறம்படக் காட்டியிருப்பார்) பள்ளிப்பருவத்திலிருந்த எங்களைப் போன்ற விடலைகளினது 'வெறுப்பை' சம்பாதித்துக் கொண்டார் என்பது நினைவிருக்கிறது.
பூர்ணம் விஸ்வநாதனை அனைவரது நினைவிலும் பதியச் செய்த படங்களாக எனக்குத் தோன்றுவது 'வருஷம் 16' மற்றும் 'மகாநதி'. 'வருஷம் 16' (1989) படத்தின் மூலமாக, பார்வையாளர்களிடம் பெரும் ஆர்வத்தைத் தூண்டியிருந்த குஷ்பூவிற்காக படம் பார்க்கப் போய், கார்த்திக்கையும் பூர்ணம் விஸ்வநாதனையும் மனதில் ஏற்றிக் கொண்டு வந்த அனுபவமே என்னுடையது. இந்தப் படத்தில் பூர்ணம் கதாபாத்திரமாக வாழ்ந்திருந்தார் என்றே சொல்வேன். குறிப்பாக 'வருஷம் 16' படத்தைத் தவிர்த்து, தாத்தாவிற்கும் பேரனுக்குமான உறவணுக்கத்தைப் பற்றிய படங்கள் தமிழில் குறைவு அல்லது இல்லவே இல்லை.
அப்படத்தில் வரும் வி.கே. ராமசாமி, ஜனகராஜ் ஆகியோரது வலுவான கதாபாத்திரங்களின் சுவாரசியங்களையும் தாண்டி பூர்ணம் விஸ்வநாதனது கதாபாத்திரத்தின் வீச்சு படம் முழுக்கவே அழுத்தமாக வெளிப்பட்டிருக்கும். பேரன் கண்ணனோடு (கார்த்திக்) ஏற்பட்ட மனமுரணில் அவர் சாப்பிடாமல் சாய்வுநாற்காலியில் அமர்ந்திருக்கும் காட்சி, இதை எழுதும்வேளையில் எனது மனக்கண்ணில் பிம்பமாகிறது. பூர்ணத்தின் நடிப்பைத் திரையில் நிலைக்கச் செய்யும் காட்சியும் இதுதான். இப்படத்தைப் பார்த்த நாட்களில், ஒவ்வொரு குடும்பத்திலும் மென்மையுள்ளமும், அக்கறைகுணமும் கொண்ட தாத்தாக்கள் இருப்பார்களெனில் அவர்கள் பூர்ணம் விஸ்வநாதனது தோற்றத்தை ஒத்திருப்பார்கள் என்று நான் கற்பனையில் எண்ணிக் கொண்டதுண்டு.
'மகாநதி' (1993) படத்தில் கிருஷ்ணசாமிக்கு (கமல்ஹாசன்) அடுத்து முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரம் பூர்ணத்தினுடையது. ஏறக்குறைய படத்தின் பெரும்பான்மை காட்சிகளில் வந்து செல்கிறார். சிறைச்சாலைக்குள் கிருஷ்ணசாமியும் அவரும் நிகழ்த்தும் மதம் குறித்த எதிரெதிர் வினைகள் சுவாரசியமானவை. சூழப்பெற்ற மனித வஞ்சிப்பால் தளர்வுற்று, தான் வணங்கும் கடவுளர்மீது உள்மனதில் சிறு சந்தேகம் தோன்றும்நிலையிலும், மத நம்பிக்கையை கைவிடாது இறுகப் பிடித்துக் கொள்ளும் சராசரி நபராக அவர் வெளிப்படுத்தியிருந்த நுட்பமான நடிப்பாற்றல் அவருக்குள் இருந்த சிறந்த கலைஞரை வெளிச்சமிட்டது எனலாம்.
அதேபோல், கல்கத்தாவிலுள்ள சோனாகஞ்ச் பாலியல் தொழிலாளர்களது குடியிருப்புக்களில் மகளைத் தேடிச் செல்லும் கிருஷ்ணசாமியுடன் பூர்ணம் விஸ்வநாதனும் செல்வார். அப்போது அவர் பேசும் ஒவ்வொரு வசனமும் அந்தக் காட்சிகளின் துயரத்தை மேலும் அனுபவப்படுத்தும்விதமாக அமைந்திருக்கும். தமிழ்சினிமா வரலாற்றில் பூர்ணம் விஸ்வநாதனின் மறக்கவியலாத நடிப்புப் பங்களிப்பு என்னவென்று யாரேனும் கேட்டால், நான் தயங்காமல் சுட்டிக்காட்டுவது 'மகாநதி' திரைப்படமாகவே இருக்கும். அந்த அளவிற்கு அவரது தேர்ந்த நடிப்பாற்றல் அப்படத்தில் பதிந்துள்ளது.
அவரை நான் நேரில் பார்த்தது ஒருமுறைதான். அது ஏதேச்சையான நிகழ்வு. 1993. சூட்சுமமான பிரம்மாண்டத்தில் அச்சமுறச் செய்வதும், ஜனப் பிதுக்கத்தில் தனி இருப்பின் அடையாளத்தை உதிர்ந்துபோகச் செய்வதுமான நகரமாகத் தென்பட்ட சென்னைக்கு நான் இடம்பெயர்கிறேன். நடிகர்களை நேரில் பார்த்திராத பருவம். கலைவாணர் அரங்கத்தில் ஏதோ திரைப்படம் சார்ந்து விருது வழங்கும் விழா ஒன்று நடக்கிறது என்றறிந்து செல்ல, அரங்கத்தின் வெளிமுற்றம் தள்ளுமுள்ளு கூட்டத்தால் நிரம்பி வழிந்துகொண்டிருந்தது. 'நடிகர்களைக் காண கிராமத்தைப் போல பெருநகரம் தவம் கிடக்காது' எனக் கற்பனை செய்திருந்த எனக்கு, அந்த தள்ளுமுள்ளு அதிர்ச்சியைத் தந்தது. கூட்டத்தின் கொந்தளிப்பு கருதி, ஆறுதல் பரிசாக சுவற்றில் கட்டப்பட்ட வெண்திரையில் உள்ளே நடக்கும் விழா நிகழ்வினைக் காட்டத் தொடங்கினார்கள். கூட்டம் சற்று நிதானப்பட்டு அப்படியே நின்றபடியும் அமர்ந்தபடியும் மேடையேறும் நடிகர்களைக் கண்டு விழிவியந்துகொண்டிருந்தது. எனது ஊரில் தொலைக்காட்சியில் விழா பார்த்த அனுபவம்தான் அங்கும் எனக்கு ஏற்பட்டதெனினும், 'நிஜத்திற்கு மிகவும் அருகிலிருக்கிறேன்' என்கிற எண்ணம் மாத்திரம் கூடுதல் சலனம்.
விழா முடிந்தபின் வெளியேறும் வாகனங்களின் பின்னே பதறியோடி 'அவர் போகிறார், இவர் போகிறார்' எனக் கூட்டம் சூழ்ந்து கொள்ள, 'யாரையும் நேரில் பார்ப்பது இயலாத காரியம் போல' என எண்ணிக் கொண்டு அரங்கத்தின் வெளிவாசலை நோக்கி நடந்தேன். ஆர்வக் கசிவிலிருந்த மக்கள் திரளை கடந்தபோது பக்கவாட்டில் திடீரென ஒரு வெளிச்சம் போன்ற உணர்வு. திரும்பிப் பார்க்க, பூர்ணம் விஸ்வநாதன் அவரது துணைவியாருடன் தன்னுடைய வாகனத்தில் ஏறப்போகும் கணங்களுடன் நின்றிருந்தார். அவரை எவரொருவரும் கண்டுகொள்ளவில்லை என்பது எனக்கு சிறிய அளவில் ஆச்சரியத்தைத் தந்தது.
திரைப்படத்தில் நான் கண்டதைவிட மென்மைப்பட்ட தோற்றத்திலும், மகிழ்ச்சிக்குப் பின்னாக சாந்தமுற்ற பாவனையிலும் இருந்தார். எனக்கு 'வறுமையின் நிறம் சிவப்பு' வித்வானாக அவர் செய்த நடிப்புக் காட்சிகள் சில கணங்களுக்கு சிறு பூச்சிகளாக ஞாபகத்தில் அலைந்து மின்னி மறைந்தன. எனக்கு அவரிடம் பேசவேண்டும் என்கிற எந்த நிர்பந்தமும் இல்லாமல் அவர் காரில் ஏறிச் செல்லும்வரை அங்கேயே நின்றிருந்தேன். பின்பு, ஒரு மோசமான தேநீரை உற்சாகமாக அருந்திவிட்டு பேருந்தில் ஏறி வீடு திரும்பின வழியில், என்னையுமறியாமல் அவர் 'வறுமையின் நிறம் சிவப்பு' படத்தில் வித்வானாக வாயசைத்த 'நல்லதோர் வீணை செய்தே' பாடலை அடங்கின சத்தத்தில் பாடினபடியே தூரம் கடந்தேன். என் மனதில் அவரது பிம்பம் நட்புடன் ஒட்டிக் கொண்டு உடன் வந்த பயணம் அது.
சமீபத்தில், வெளிநாட்டுத் தொலைக்காட்சியின் தனிப்படத் தொடர் (Tele Films) ஒன்றிற்காக சிறுகதைகள் வேண்டும் என எனது நண்பர் கேட்டுக் கொண்டபோது, நான் உடனடியாக எழுதித் தந்த முதல் கதை 'ஊஞ்சல்'. தன்னியல்பாக எழுதப்பட்ட அக்கதையின் மையப்பாத்திரத்தின் நடமாட்டம், பூர்ணம் விஸ்வநாதனது மனபிம்பத்தின் அசைவுகளை ஒத்திருக்கிறது என்பதை கதையை எழுதும் கணங்களிலேயே கவனித்துவிட்டேன். நண்பரிடம், 'இந்தக் கதை படமாக எடுக்கப்பட்டால், மையக் கதாபாத்திரத்திற்கு பூர்ணம் விஸ்வநாதன்தான் பொருத்தமானவர்' எனக் கூற, அவரும் உணர்ந்து ஆமோதித்தார். பூர்ணம் இப்போது நடிப்பதில்லை என்றாலும் அவரிடம் கதையின் தீவிரத்தன்மையை உணர்த்துவதன் வாயிலாக ஒப்புதல் பெற்றுவிடலாம் என எண்ணியிருந்தேன். கதை படமாவதற்கான தீர்மானிக்கப்படாத காலத்திற்குரிய அவகாசமின்றி பூர்ணத்தின் வாழ்வு நிறைவுபெற்றுவிட்டது. அவருக்கு அந்தக் கதை அவரது தொடர்ந்த நடிப்பில் மறந்துவிடக்கூடிய ஒரு சிறு பங்கேற்பாகத்தான் இருந்திருக்கும். ஆனால் அந்தப் பங்கேற்பு இன்றைக்கும் எனது கற்பனையிலிருக்கும் அப்படைப்பின் முழுமைக்கு உகந்த ஆன்மாவைத் தருவதாய் அமைந்திருக்கும்.
*
0 comments