இரு கவிதைகள்
November 08, 20081நினைவுப் பாதை
*
2எதைச் செய்தாலும் அறிந்தாலும் உணர்ந்தாலும்
எல்லாவற்றிற்கும் இடைவிட்டு
இடை தொடர்ந்து வருமொரு
சூன்யம்தான் நம்மைக் காக்கிறது
எனவே அர்த்த பூடகம் உடையாமல்
பிம்பங்கள் சூழும் உதாரணம் கலை
இல்லையெனில்
மீண்டும் சாலைகடந்த பூனையின் நசுங்கின அலறல்
உனது எழுத்தின் செவியில் கேட்கும் என்றாய்
உன்னுள் பாவிக்கிடந்த இம்முறை
உனது பார்வையில் உள்பொங்கின மறை சிரிப்பை
கேட்டபோது குறுக்கிட்டது
பூனையின் மருட்சியில் பிறந்தலையும் சூன்யமுகம்
அடர்மழையென வீறுகிறது
உனது சொல் துவக்கின நினைவின் மின்னல் வலி
நாம் அமர்ந்த அறையில்
முற்பிம்பங்களின் நெரிசலை பத்திரப்படுத்தி
கடிகாரம் நிற்கிறது
மரங்கள் உடல்சாயும் ஓசையின் நிலச்சரிவு
அயர்வடைந்த மின்விசிறியின் மனஉளைச்சல் இன்னும்
உன் கண்ணில் அடர்கிறது
சொல்லை புணர்ச்சி செய்து நீ வாழத் துடித்த உயிர்த் தினவு
காமம் இழந்தவனின் கவிதை மேலிருக்கும்
கத்தியின் கூர்மை என
உனது வாக்கியங்களின் உள்சயனம்
3சொல்லில் சிக்காது சிந்தனையில் வாராது
இருப்பற்றுப் போனதை உணர்ந்த அச்சத்தின் ஊன ஒலி
சடலம் நிரம்பும் உடலின் மனப்பிதற்றல்
வானம் எட்டுவதாயிற்று
வழிநெடுக நிழல்தீண்டும் தனிமையின் கொலை துரத்தல்
அக்கண உண்மை
கிளை சாய்ந்த மரம் முகரும் பறவையின் கடும்துயர்
வெகுண்ட சீற்றத்தில்
பற்றுகிறது பாம்பின் நாக்கு தீயின் கொடும் திளைப்பில்
பசியெறும்பு தின்ற சரீரம்
வசிப்பின் மெய்மையை கடந்து
மறைந்துபோனது தொலைதூரம்
அடிபட்டும் சாகாத பறவையாய் உணர்வின் சித்தநீட்சி
மாத்திரம்
கலை தின்றுதீர்த்த வாழ்வு இருள்வெளியில் பெரும்பான்மை
கழிந்ததும் பின் அழிந்ததும்
உனக்கும்
உன்னைத் தொட்ட எனக்கும் நிகழ்ந்த மாயம்
பெரும்நரை பூத்து தோற்றகணம்தான்
ஞானக் குகையின் வழிதிறந்து பேரதிர்வில்
சிரித்தான் உன்னுள்
நீ புக நினைத்த சித்தன் எனும் புத்தன்
நானுமறிவேன் விலங்குகள் நிறைந்த
அந்த மலைப்பாதையை
பாலில் வழியும் முலையென கண்விழிக்கிறது
அவனும் நீயும் இருந்தது குறித்த நம்பகம்
கால்தவறி தரைவிழுந்து
இகம் கரம்கோர்க்கும் உறவின் விருந்தில்
சூடேற்றப்படும் நேசத்தின் சதை
பழைய உணவாக பரிமாறப்படுகிறது
வரவை உணர்த்தும்
மழைதருணத்தின் கதவுகளாக அறைபடுகிறது
அங்கு
தொடர்ந்திருப்பது குறித்து நாம் கொண்ட கற்பிதம்
உனது பிரதி வாசிக்கப்படுகிற தருணத்தில்
மண் புதைந்த பாழ் சிற்பத்தின் கற்துளையில்
எறும்புகள் தியானிக்க துவங்குகின்றன
நெடும்நேரம்
நசிவின் போதம் திரள நினைத்துப் பார்க்கையில்
குற்றம் கனக்க நிகழ்ந்திருக்கிறது
ஆதிமீனை உட்கொண்ட காமமுயற்சி
பல்லியின் திட்டமிடலுக்கு பிணமாகும் பூச்சியின் பிரதிபலிப்பு
உன்னை எழுத்தில் நீ இழந்ததுபோலவே
சாயை தருகிறது இப்பொழுது
சுற்றத்துடன் கொண்டிருந்த அன்பை துறவு செய்து
பற்றின கிளை அறுபடும் தருணத்தில் புத்தன் (ஆக) நீ யோசிக்கிறாய்
மீனின் விறைத்த பார்வை
இத்தனை அனுபவங்களும் தறிகெட்டலையும்
அப்பாலின் மூலம்
யாரும் விளங்கிக்கொள்ள முடியாத
வாழ்வுப் புனைவை அணிந்து
நீ உன்னைக் கண்ணாடியில் பார்த்துக் கூறிக்கொண்டது:
4உனக்கு நீ இருப்பதால் நான் உண்டு: எனக்கு நீ இல்லை
என்றால் நான் இல்லை
உனது நடைதொடர்ந்து
நீரின் சூலுற்ற பெருக்கத்தில் உறையக் காத்திருக்கிறது
அசைவின் அனைத்தும்
தனிமைப்பட்ட கதியில் உனது சூரல் நாற்காலியை
சுற்றி வருகிறது
நீ நேசித்து உயிர் தப்பின பூனை
உடலசைத்து எஞ்சியிருந்த அலைவுக் காலம்
*
(தன்னையுணரத் தலைப்பட்ட நகுலன் நினைவில்)
1. நகுலனது நாவலொன்றின் தலைப்பு
2, 3, 4. அவரது ‘அஞ்சலி’ எனும் நீண்ட கவிதையின் வரிகள்
*
1நிழலற்றவனின் அலறல்
*
நூற்றாண்டைத் தொட்டுவிடும் ஒரு மரத்தின் வேரடியில்
அமர்ந்து வாசிக்கிறேன் உனது கவிதைகளை
இடைவெளியற்று பிணைந்திருந்த வெயிலின்
மன சூன்யத்தை மேலும்
வெம்மைப்படுத்திக் கொண்டிருந்தன
கடக்கும் வாகனங்களின் சமன்குலைந்த பேரோசை
காற்று நீங்கின வெற்றிடத்தின் மூச்சுத் திணறல்
அசையாதிருந்தது சூழ்மை
வியர்த்தது மேலும்
வாசிப்பின் நதியோட்டத்தில்
எண்ணெயில் பொறித்த மனித உடலமாக மிதந்து சென்றது
உனது எழுத்தின் துயரம்
நோய்கண்டவனின் நடையென புரளும் பக்கங்கள்
மரத்தின் மறைந்த நினைவுகளாய் அடர்ந்திருந்த காகிதத்தில்
தேள்கடி பட்ட தடங்களென கரும்வரிகள்
எட்டிப்பார்த்து கால்நழுவி தேடிச் சென்றதில்
விழியில் பட்டது வறுமையும் கூக்குரலும்
வழிநிலைத்த அரவமானேன் நெடும்பொழுது
நொடிப் பிளவின் அதிர்வில்
எழுத்துக்களின் சிறையுடைத்து வெளிவீழ்கிறேன்
வரிகள் புதையுண்ட மயானத்தில்
மதுக்குப்பியின் இறுதிச் சொட்டை அருந்திவிட்டு
காத்திருக்கிறாய் நீ
அனுபவங்களின் சீழ் கசிவை எழுத முயலும் பதற்றத்துடன்
எனது வரவை எதிர் கணித்து
நமது சந்திப்பில் பாயக் காத்திருந்தது
தறிகெட்ட போதையிலான விபத்தின் இரத்த நெடி
பொழுதின் மனப்பிறழ்வில் தனிமையின் சிரமறுக்க
உனது மடியில் முளைத்துவிட்ட மரமொன்றைத் தாலாட்டி
பாடலொன்றை துவங்குகிறாய்
காற்றின் காதுகள் கிழிபடும்படி
2சிரஞ்சீவியின் சாபத்தால்
வயோதிகம் கண்ட மழலையின் ஓலத்தைச் சுமந்தலைகிறது
அப்பாடல்
உச்ச இசை கதியில்
பசித்த கனவின் வேதனையில் நொடிகள் கரைய
மட்கிப் போனது உனது மடியிலிருந்த மரம்
தனிமைப்பட்டு மீண்டும் அகம் வெறிக்கிறாய்
துளி தவறாமல்
படைப்பவனின் கண்ணீரைச் சேகரித்து
நிரம்பிவழிகிறது உனது உற்றதுணையான மதுக்குப்பி
எனது வருகைக்குப்பின் நாம்
கிளையடித்து மூட்டிக்கொண்ட தீயில்
வேதனையற்ற சிரிப்பொன்றை நீ உதிர்த்தாக
என்னுள் கூறிக் கொள்கிறாய்
3நானிந்த மண்ணில் இருப்பதும் இல்லாததும் ஒன்றுதான்
வறுமையின் பிரளயம் தகிக்கும்
நிலைப்பை தாங்கவொண்ணாது
நீ உடைத்த மதுக்குப்பியிலிருந்து தெறித்த துளிகள்
ரத்தம் பூசின வண்ணத்துப் பூச்சிகளாகப் பறக்கின்றன
வெளியெங்கும்
நிலா கொப்பளித்த சற்றுநேரம்
நினைவின்போதம் கண்மறைக்க
உண்மையின் அம்மணத்தை மறைந்துபார்த்த பதற்றத்தோடு
அமர்ந்திருக்கிறோம் அவரவர் வெளியில்
நமது மௌனத்தில் உறைந்திருந்தது
உடலை உண்ணுமுன் உயிரை மயங்கச்செய்யும் பாம்பின்
வலு அணைப்பு
எதிர்பாராமல் பாத்திரம் உருண்டோடும் சிரிப்பை தவறவிட்டு
4ரணம் நிறைய கவிதையும்
கவிதை நிறைய கால்தடங்களுமாக விடைபெறுகிறாய் நீ
உனது வாழ்வை
புகைப்படமென ஞாபகம் காக்கிறது
நீ பதிந்த இடத்தில்
5காற்றின் கூர்மையான கத்தி விழுந்து
வேரோடு சாய்ந்த மரம்’
மேலும்
நீ கணங்களுடன் கொண்டிருந்த தொடர்பை
நினைவாய் ஓவியப்படுத்துகிறது
காகங்கள் இரையென எண்ணி முகர்ந்துசென்ற
உடைந்த குப்பியின் உதிர்ந்த சில்லொன்று
*
(மலையாளக் கவிஞர் ஏ. அய்யப்பன் நினைவில்)
1. ‘புது எழுத்து’ வெளியீடான ‘அய்யப்பன் கவிதைகள்’ தொகுப்பில் ‘பாவம் மகாகனியின் இதயம்’ கவிதையிலிருந்து எடுத்தாளப்பட்டு கவிஞர் சுகுமாரன் இட்டிருக்கும் முன்னுரையின் தலைப்பு
2. அவரது ‘புறத்தோல்’ கவிதையின் வரிகள்
3. அய்யப்பனது ‘ருத்ரா என்ற காதலிக்கு’ கவிதையின் வரியிலிருந்து உருவானது
4. அவரது ‘ஞானஸ்நானம்’ கவிதையின் வரிகள்
5. அவரது ‘இரவுகள்’ கவிதையின் வரிகள்
*
0 comments